கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன்சிலையை மாற்றி மோசடி 44 ஆண்டுகளுக்குப்பிறகு போலீசார் விசாரணை


கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன்சிலையை மாற்றி மோசடி 44 ஆண்டுகளுக்குப்பிறகு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 May 2018 4:30 AM IST (Updated: 24 May 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள கைலாசநாதர்கோவிலில் ஐம்பொன் சிலையை மாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து 44 ஆண்டுகளுக்குப்பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்,

1974-ம் ஆண்டு கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் ஆன 4 நடராஜர் சிலைகள் பிடிபட்டன. இந்த சிலைகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உள்ளது என்பது தெரிய வந்தது. அதில் ஒன்று தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்த சிலை ஆகும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பிடிபட்ட ஒரு நடராஜர் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற சிலைகள் எங்கு இருக்கிறது என தெரியவில்லை.

இதற்கிடையில் கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலைகள் குறித்து உதவி ஆணையர் பரணிதரன், கோவில் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சரிபார்த்துள்ளனர். அப்போது ஒரு நடராஜர் சிலையின் அமைப்பு மாறி இருந்தது. இது குறித்து விசாரித்தபோது அந்த சிலை தான் தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது. 1974-ம் ஆண்டுக்கு முன்பு அதாவது 44 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சிலையை மாற்றி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கோவில் ஆய்வாளர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் மற்றும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் நேற்று கோவிலுக்கு சென்று சிலைகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறுகையில், “கைலாசநாதர் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை 44 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி உள்ளனர். அந்த சிலையில் திருவாச்சி உடைந்து காணப்படும். அந்த சிலை தான் கொல்கத்தா விமான நிலையத்தில் பிடிபட்டு தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது. 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்து இருப்பதால் இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும். அந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் உரிய விசாரணை செய்து சிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கொல்கத்தாவில் பிடிபட்ட மற்றொரு சிலை கும்பகோணம் அருகே உள்ள தண்டாந்தோட்டத்தில் உள்ள கோவிலில் உள்ளதாக இருக்கும் என சந்தேகம் உள்ளது. இந்த கோவிலில் 1971-ம் ஆண்டு நடராஜர், அம்மன் சிலை உள்பட 2 சிலைகளும், 72-ம் ஆண்டு 5 சிலைகளும் திருட்டு போனது. இது குறித்து புகார்கள் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. மற்ற 2 சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். 

Next Story