மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.08 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.08 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-24T02:51:26+05:30)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்துக்கான தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அதிகாரி உஷா வெளியிட்டார்.

இந்த தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அந்தந்த பள்ளிகளிலும் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

தேர்ச்சி விகிதம் சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 308 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 685 மாணவர்கள், 10 ஆயிரத்து 560 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 245 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இவர்களில் 10 ஆயிரத்து 949 மாணவர்கள், 10 ஆயிரத்து 201 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 150 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இது 95.08 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் 96.54 ஆகும். இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும், தேர்ச்சி விகிதம் 1.46 சதவீதம் சரிவடைந்து உள்ளது.

19-வது இடத்திற்கு தள்ளப்பட்டது

நாமக்கல் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 9 இடங்கள் பின்தங்கி, 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 97 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 97.21 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.09 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 99.67 சதவீதம் பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 97.10 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story