விழுப்புரம் மாவட்டத்தில் 90.18 சதவீதம் பேர் தேர்ச்சி


விழுப்புரம் மாவட்டத்தில் 90.18 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 24 May 2018 4:30 AM IST (Updated: 24 May 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.18 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 79 மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 50 மையங்களிலும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 50 மையங்களிலும் என 179 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

346 அரசு பள்ளிகள், 15 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 8 அரசு மாதிரி பள்ளிகள், 48 நிதி உதவி பெறும் பள்ளிகள், 120 மெட்ரிக் பள்ளிகள், 26 சுயநிதி பள்ளிகள், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆக மொத்தம் 564 பள்ளிகளில் இருந்து 23 ஆயிரத்து 618 மாணவர்களும், 23 ஆயிரத்து 610 மாணவிகளும் என மொத்தம் 47 ஆயிரத்து 228 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் 20 ஆயிரத்து 827 மாணவர்களும், 21 ஆயிரத்து 762 மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 589 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.18 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.17 சதவீதமாகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 90.18 ஆகும். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 1.63 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 91.81 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வை காட்டிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 1.63 சதவீதம் குறைந்துள்ளது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story