துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம், 12 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம், 12 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 23 May 2018 11:15 PM GMT (Updated: 2018-05-24T04:39:25+05:30)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 31 பெண்கள் உள்பட 303 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்ததை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காதர் முகைதீன், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், வக்கீல் சீனிவாசன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜபாளையத்தில் 2 இடங்களில் நடைபெற்ற மறியலில் 32 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 34 பேரும், சேத்தூரில் 28 பேரும், கீழராஜகுலராமனில் 24 பேரும், அருப்புக்கோட்டையில் 30 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஜீவா, மாவட்டக்குழு சுப்பாராஜ், லாசர், மாடசாமி, கணேசன், கிருஷ்ணமூர்த்தி, விஜயராமன் உள்பட 25 பேரும், வத்திராயிருப்பில் 36 பேரும், காரியாபட்டியில் 12 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடராஜன், பொன்னையா ஆகியோர் தலைமையில் 13 பேரும், சாத்தூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில் 27 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 303 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு ஊழியர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 17 பெண்கள் உள்பட 88 பேர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 பெண்கள் உள்பட 133 வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதனால் கோர்ட்டுகளில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

Next Story