தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக தொடர் போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
தூத்துக்குடியில் செயல் படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்து, துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒரு எஸ்.எஸ்.எல்.சி. மாணவி உள்பட 10 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அந்த வகையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று தி.மு.க. மீனவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி கோவலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். இதில் கிளைக்கழக செயலாளர்கள் திருமால், சீனுவாசன், மாணவரணி உமாபதி, ஆனந்த் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் துரை முன்னிலை வகித்தார்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்கம் சேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் குளோப் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து குறிஞ்சிப்பாடி கல்குணத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி அன்புராஜ் (வயது 27) என்பவர் நேற்று கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் கையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினார். இதை அறிந்த புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார் மற்றும் போலீசார், அவரிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
சிதம்பரம் வி.ஜி.பி. தெருவில் உள்ள படித்துரை இறக்கத்தில் நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்பட 55 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமை தாங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் முகமதுயூனுஸ், முனவர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரமேஷ், பாபு, பரமானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகமது இப்ராஹிம் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வடலூரில் பஸ்நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகுருசாமி, மாநில அமைப்பு குழு செயலாளர் ஜோதிகுமரவேல், தொகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
நெய்வேலி 30-வது வட்டத்தில் உள்ள சூப்பர்பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், வீரமுத்து, சிறுத்தை சிவா, குமார், துரைபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் குழந்தைராஜ் வரவேற்றார். மேற்கு மாவட்ட பொருளாளர் துரை மருதமுத்து, மாநில நிர்வாகி குரு ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை ராசா, கார்த்தி, அய்யப்பன், சிவா, மணிகண்டன், ராமமூர்த்தி, குணசேகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முத்துகதிரவன், மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல், தனியார் கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முனவர் உசேன், ஆல்இந்திய இமாம் கவுன்சில் சையிபு, அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story