எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 7:21 AM IST (Updated: 24 May 2018 7:21 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மதுரை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 585 மாணவர்களும், 20 ஆயிரத்து 395 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 19 ஆயிரத்து 213 மாணவர்களும், 19 ஆயிரத்து 834 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.28 ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 94.63 சதவீதமாக இருந்தது.

அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.35 சதவீதமாக உள்ளது. 40 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநகராட்சி பள்ளிகள் 94.65 சதவீதமும், கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகள் 97.58 சதவீதமும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 88.89 சதவீதமும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 94.11 சதவீதமும், அரசு நிதியுதவி பாதியளவு பெற்று வரும் பள்ளிகள் 97.03 சதவீதமும், சுயநிதிப்பள்ளிகள் 94.31 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 98.69 சதவீதமும், ரெயில்வே பள்ளி 96.15 சதவீதமும், சிறப்புப்பள்ளிகள் 91.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களில், கணிதப்பாடத்தில் 15 பேரும், அறிவியல் பாடத்தில் 28 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 277 மாணவ,மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரேயொரு பாடத்தில் மட்டும் 289 பேரும், 2 பாடங்களில் 633 பேரும், 3 பாடங்களில் 328 பேரும், 4 பாடங்களில் 145 பேரும், 5 பாடங்களில் 21 பேரும் தோல்வியுற்றுள்ளனர். கடந்த ஆண்டில் ஒரு பாடத்தில் மட்டும் 1,170 பேர் தோல்வியுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த வருடம் பாடவாரியாகவும், பள்ளிகள் வாரியாகவும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதற்காக முயற்சி செய்த ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு முடிவை அறிந்துகொண்ட மாணவ-மாணவிகளில் பலர் உடனடியாக பிளஸ்-1 வகுப்பில் சேர பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பித்தனர்.

மாநகராட்சி பள்ளி 94.65 சதவீதம் தேர்ச்சி

மதுரை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படித்த 349 மாணவர்கள், 1,428 மாணவிகள் என 1,777 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். இவர்களில் 1,682 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 329 பேர். மாணவிகள் 1,353 பேர். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.65 ஆகும். கடந்த 2016-17-ம்ஆண்டில் தேர்வு எழுதியவர்கள் 1,933. தேர்ச்சி பெற்றவர்கள் 1,830. தேர்ச்சி விகிதம் 94.62 ஆகும்.

மாநகராட்சியின் கீழ் உள்ள 24 மேல்நிலை, உயர்நிலைபள்ளிக்கூடங்களில் சுந்தராஜபுரம் இருபாலர், சேதுபதிபாண்டித்துரை ஆண்கள்மேல்நிலை, முனிச்சாலை இருபாலர், மணிமேகலைபெண்கள், பாரதியார் ஆண்கள், என்.எம்.எஸ்.எம்., அனுப்பானடி, உமறுப்புலவர்ஆண்கள், தல்லாகுளம் ஆகிய உயர்நிலைபள்ளிக்கூடங்களில் 100 க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story