தூத்துக்குடியில் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


தூத்துக்குடியில் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 24 May 2018 9:30 PM GMT (Updated: 24 May 2018 7:47 PM GMT)

தூத்துக்குடியில் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கலெக்டர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் திடீரென மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி நகரில் இயல்பு நிலையை கொண்டு வருவது தான் என்னுடைய முதல் பணி. மக்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ முக்கியத்துவம் கொடுக்கப்படும். தற்போது, புதிய போலீஸ் சூப்பிரண்டும் பொறுப்பு ஏற்று உள்ளார். தூத்துக்குடியில் அமைதி திரும்ப அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும்

துப்பாக்கி சூடு நடந்தது தொடர்பாக விசாரிப்பதற்காக தமிழக முதல்–அமைச்சர் விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளார். அதுபற்றி தற்போது கருத்து கூற முடியாது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் உறவினர்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளதாக புகார் வந்தது. அந்த மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசார் சட்டவிரோதமாக யாரையாவது பிடித்து வைத்து உள்ளனரா? என்பது குறித்து விசாரிக்கப்படும். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்காக வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயல்பு நிலை திரும்பும்போது பஸ்கள் அனைத்தும் முறையாக இயக்கப்படும். தூத்துக்குடியில் இன்னும் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.


Next Story