37–வது நினைவு தினம் அனுசரிப்பு: திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37–வது நினைவு தினத்தையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37–வது நினைவு தினத்தையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு கல்லூரி சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன், கல்லூரி முதல்வர்கள் சுப்பிரமணியம் (ஆதித்தனார் கல்லூரி), ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), வைஸ்லின் ஜிஜி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), மரிய செசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைக்குரு செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி), சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்புதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில், சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, துணை தலைவர் யாபேஷ், மாவட்ட செயலாளர் செல்வன், மாநில இளைஞர் அணி செயலாளர் ஜெபஸ் திலகராஜ், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் அழகேசன், துணை தலைவர் பார்த்தீபன், நிர்வாகிகள் பாலமுருகன், ராமகிருஷ்ணன், எம்.வெங்கடேஷ், ஆர்.வெங்கடேஷ், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜகுமார், சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காயாமொழிசி.பா.ஆதித்தனார் பிறந்த ஊரான திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள அவரது சிலைக்கு ஊர் மக்கள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சி.பா.ஆதித்தனார் சிலையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காயாமொழியில் உள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபத்தில் விஜயசிங் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், தையல்பாகு ஆதித்தன், டி.எஸ்.பி.ஆதித்தன், ரோகிணிசந்திர ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், வரதராஜ ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி தலைவர் பட்டுராமசுந்தரம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்க சிவா உள்ளிட்டவர்கள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.