தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தால் விருதுநகர் வணிகர்களுக்கு பாதிப்பு
தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் விருதுநகர் மாவட்ட வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், பணப்பரிமாற்றமும் முடங்கியது.
விருதுநகர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 12 பேர் இறந்துபோனார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகவலை தளங்களில் இயல்புநிலை திரும்புவதற்கு இடையூராக பல்வேறு பதிவுகள் வெளியிடப்பட்டதால் தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த 3 மாவட்டங்களிலும் இணையதள சேவை முடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு வணிக தொடர்பு அதிகம் உள்ளது. இந்தநிலையில் இணையதள சேவை முடக்கப்பட்டதால், இணையதளம் மூலம் வர்த்தக பரிமாற்றங்கள் நடைபெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வணிக பரிமாற்றங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதே போன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொதுமக்கள் இணையதள சேவை மூலம் பணப்பரிமாற்றம் செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தபால் அலுவலக சேவைகளையும் பயன்படுத்த முடியாமலும், வங்கிகள் மூலமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமலும் விருதுநகர் மாவட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story