தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தொடக்கக்கல்வி பட்டய பயிற்சி தேர்வு
தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 1,379 பேர் எழுதினார்கள்.
திருப்பூர்
தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் சார்பில் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை எழுத திருப்பூர் மாவட்டத்தில் 1,443 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத திருப்பூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு எழுதுபவர்களில் பலர் தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கே வந்து விட்டனர். பின்னர் அவர்கள் பள்ளி மரத்தடி மற்றும் பள்ளி வளாகத்தில் குழுவாக அமர்ந்து படித்தனர். தேர்வுகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 359 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 344 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 15 பேர் எழுத வரவில்லை. குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 462 பேரில் 438 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள், 24 பேர் தேர்வு எழுத வரவில்லை. உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 457 பேரில் 439 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 18 பேர் தேர்வு எழுத வரவில்லை. தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 165 பேரில் 158 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 7 பேர் தேர்வு எழுத வரவில்லை. அந்த வகையில் மொத்தம் 1,379 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 64 பேர் எழுத வரவில்லை. தேர்வு நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இந்த தகவலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story