நிதிநிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது; 2 பேர் சரண் கார், பணம் பறிமுதல்


நிதிநிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது; 2 பேர் சரண் கார், பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

வடபழனியில் நிதிநிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இருந்து கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை மேற்கு மாம்பலம், விவேகானந்தபுரம், 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்(வயது 49). இவர் வடபழனி, பிள்ளையார் கோவில் தெருவில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு வங்கி கடன் பெற்றுத்தரும் புரோக்கராக சரவணகுமார் என்பவர் அறிமுகமானார்.

கடந்த மாதம் மோகனின் நிதிநிறுவனத்திற்கு சென்ற சரவணகுமார் அவரது நண்பர் நடத்திவரும் தனியார் மருந்து நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுகிறது என கூறினார். இதையடுத்து மோகன் மற்றும் அவரது உறவினர் மாணிக்கம் ஆகியோரை காரில் அழைத்து சென்றார்.

சேலையூர், மப்பேடு கிராமத்தில் காரை நிறுத்தி அங்கு மேலும் 2 பேரை காரில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக மோகனை மிரட்டினர். பணத்தை கோயம்பேடு தேர்தல் அலுவலகம் அருகே நிற்கும் தனது நண்பரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். மோகன் தன் சகோதரர் கணேசனை தொடர்புகொண்டு பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

அந்த கும்பல் கூறிய இடத்தில் இருந்த நபரிடம் ரூ.33 லட்சத்தை கணேசன் கொடுத்தார். பின்னர் அந்த கும்பல் மோகன் மற்றும் மாணிக்கம் அணிந்திருந்த 28 பவுன் நகைகள் மற்றும் செல்போன்களை பறித்துக்கொண்டது. பஸ் செலவுக்காக ரூ.600 மட்டும் கையில் கொடுத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.

இதுகுறித்து மோகன் அளித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பசுபதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.

நிதிநிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து கடத்தல்காரர்களை தீவிரமாக தேடிவந்தனர். இதில் சேலையூரை சேர்ந்த சுதிர்குமார்(35) என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. போலீசார் சுதிர் குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு.

மோகனின் நிதிநிறுவனத்தில் புரோக்கராக செயல்பட்டுவந்த சுதிர்குமார் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அம்பத்தூரை சேர்ந்த தனது நண்பர் கிருஷ்ணராஜ் என்பவருடன் சேர்ந்து மோகனை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டினார்.

அதன்படி கிருஷ்ணராஜ், சரவணகுமார் என்ற போலியான பெயரில் மோகனிடம் அறிமுகமானார். பின்னர் கடன் தேவைப்படுவதாக கூறி அழைத்துச்சென்று தனது கூட்டாளிகளுடன் மோகனை கடத்தி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் அடைத்துவைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த தகவல் விசாரணையில் தெரிந்தது.

போலீசார் இதுதொடர்பாக எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த சேக்தாவூத்(22), சூளைமேட்டை சேர்ந்த நந்தகுமார்(23), மதுரவாயலை சேர்ந்த சீனிவாசன்(35), சேலையூரை சேர்ந்த சுதிர்குமார், கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த செல்லப்பாண்டி(45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம், 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த மணி மற்றும் வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணராஜை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story