குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் அருகே சேதுநகர் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சேதுநகர் பகுதி. இங்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்காரணமாக இப்பகுதி மக்கள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டுவந்து விற்கப்படும் தண்ணீரை ரூ.10 முதல் ரூ.12 வரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக நேற்று காலை இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் ராமநாதபுரம்-தூத்துக்குடி சாலையில் திடீரென்று உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள், குடிநீர் வழங்காதவரை மறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து அங்கு ராமநாதபுரம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் ஆகியோர் சென்று வாணி பகுதியில் குடிநீர் வினியோகம் மின்மோட்டார் பழுது காரணமாக தடைபட்டதாகவும், தற்போது பழுது சரிசெய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் தொடங்கி உள்ளதாகவும், ஓரிருநாளில் முழுமையாக அனைத்து மோட்டார்களும் இயங்கியதும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்கள் காலிகுடங்களுடன் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story