வேளாண்மைத்துறை சார்பில் வளர்ச்சிப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் நடராஜன் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி-
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண்வளம், மண்ணின் தன்மை ஆகியன முதன்மையான பங்கு வகிக்கிறது. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இந்த சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புஉள்ளது.
ஒரு பயிருக்கான உர தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு விவரம் அறிய மண்பரிசோதனை செய்வது மிக மிக அவசியமாகும். மண்பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு அறிந்து உரமிட மண்வள அட்டை திட்டம் மூலம் தற்போது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் முதல் சுழற்சியில் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுஉள்ளன. 2-ம் சுழற்சியில் இதுவரை 75,686 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டு முடிவில் மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரம் விவசாயிகளுக்கு இரண்டாம் சுழற்சியில் மண்வள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்கு தேவையான அளவு உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே, விவசாயிகள் விற்பனையாளர்களிடம் இருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற திட்டமிடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் சென்று மண் பரிசோதனை நிலையத்தில் மண்ணின் உப்பின் நிலை, அமில கார நிலை, மண்ணின் சத்துகள் அளவிடும் கருவிகள், மண்நயம், சுண்ணாம்பு சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துகளை அளவிடும் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பரமக்குடி தாலுகா மேலப்பெருங்கரை நீர்வடிப்பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊருணி ஆழப்படுத்தும் பணிகளையும், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு சூடியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின்கீழ் ரூ.1.லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியினையும், பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ1லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளி மூலம் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து நெல்மடூர் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் ஊருணி ஆழப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். 12 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.24,000 மதிப்பிலான 10 கைத்தெளிப்பான்கள் மற்றும் 2 தார்ப்பாய்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார், பரமக்குடி வட்டார வளாச்சி அலுவலர் வீரராகவன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story