சிவகாசி அருகே மஞ்சுவிரட்டில் 135 காளைகள் சீறிப்பாய்ந்தன
சிவகாசி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 135 காளைகள் சீறிப்பாய்ந்தன.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கூடமுடையார்கோவில் அருகில் நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு சிவகாசி தொழிலதிபர் பயில்வான் கிருஷ்ணசாமிதேவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் விதிமுறைகளை கடைப்பிடிப்போம் என்று உறுதிமொழி வாசித்தார். மாடுபிடி வீரர்களும், மாடுகளின் உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைத்து காளைகளுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டும் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 142 காளைகள் வந்திருந்தன. இதில் 7 காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர். இதை தொடர்ந்து 135 காளைகள் பங்கு பெற்று சீறிப்பாய்ந்தன. இதை 144 மாடு பிடி வீரர்கள் களத்தில் நின்று அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் போன காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகளை பிடித்த 6 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கு இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்க்க வசதியாக அமரும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் சிவகாசி தாசில்தார் ஸ்ரீதர், ஜல்லிக்கட்டு தலைவர் ராஜசேகர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்தி வேல், ஜெயலலிதா பேரவை ரமணா, சிவகாசி வீட்டு வசதி சங்க தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story