பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 18,307 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.36 கோடி வரவு வைக்கப்பட்டது


பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 18,307 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.36 கோடி வரவு வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 18,307 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.36 கோடி வரவு வைக்கப்பட்டது என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-

இந்த ஆண்டு மே மாதம் வரை பெய்யவேண்டிய இயல்பான மழை அளவு 138.97 மி.மீ. இதில் இதுவரை 135.22 மிமீ மழை பெய்து உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான தரமான சான்று பெற்ற நெல் விதைகள் 328 டன், பயறு வகைகள் 15.50 டன், மற்றும் எண்ணெய் வித்துக்கள் 12 டன், சிறு தானிய பயிர்கள் 0.1 டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தேவையான உரங்களும் கையிருப்பில் உள்ளன.

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 777 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். இவர்களுக்கு வழங்க ரூ.41 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை 18 ஆயிரத்து 307 விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.36 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் மீதம் உள்ள ரூ.5 கோடியே 27 லட்சம் மற்ற விவசாயிகளின் வங்கி கணக்கு களிலும் வரவு வைக்கப் படும்.

வேளாண் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 915 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ரூ.2 கோடியே 70 லட்சத்தை வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காப்பீடு நிறுவனத்திடம் அந்த தொகையை பெறுவதில் மிக சிரமம் ஏற்படுவதால் காப்பீடு நிறுவனத்தை மாற்றும்படி அரசுக்கு எழுதி இருக்கிறோம். அந்த நல்லூர் வட்டாரத்தில் சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட 196 வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் திறக்கப்பட்ட 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 10 ஆயிரத்து 33 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடப்பாண்டு விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர் கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை ரூ.4 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் துரைராசு மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி பெருமாப்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் 300 குடும்பங்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூத்தைப்பார் பெரியகுளம், வாழவந்தான் கோட்டை ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணை தலைவர் கவுண்டம் பட்டி சுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்தார்.


Next Story