மங்களூருவில் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி சாவு


மங்களூருவில் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி சாவு
x
தினத்தந்தி 1 Jun 2018 3:48 AM IST (Updated: 1 Jun 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு,

மங்களூரு சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவருடைய மனைவி அலித்யா டிசோசா. இந்த தம்பதியின் மகள் சானல் ஜெனிசியா டிசோசா (வயது 5). வில்சன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அலித்யாவும், சானலும் சக்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சானல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அலித்யா வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில், சானல் எழுந்து வீட்டின் வெளியே உள்ள பால்கனிக்கு வந்துள்ளாள். அப்போது அரை தூக்கத்தில் இருந்த சானல், 8-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள்.

இதில் அவள் தலையில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சானல் பரிதாபமாக உயிரிழந்தாள்.

அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்படாதது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து கங்கனாடி போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து கங்கனாடி போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்காத அதன் உரிமையாளர் வீனா சல்தானா உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story