வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஊட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி
வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்ல வில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகள் பூட்டு போட்டு இருந்தன.
நீலகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 95 உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 125 ஏ.டி.எம்.கள் உள்ளன. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட வில்லை. வங்கிகளில் இருந்தும் பணத் தை எடுக்க முடியவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கான பணத்தை வங்கியில் இருந்து பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிராமப்பகுதிகளில் விளையும் மலைக்காய்கறிகளை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை வியாபாரிக ளுக்கு விற்று விட்டு முழுதொகையை பெற முடியாமல் குறிப்பிட்ட செலவுக்கான தொகையை மட்டும் பெற்று செல்கின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் ஊட்டி வர்க்கி, சாக்லெட், நீலகிரி தைலம் போன்ற பொருட்களை சுற்றுலா பயணிகள் தேவையான அளவுக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடைபெறும் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story