நீரோடையை தூர்வாரும் பணிகள் மும்முரம் விவசாயிகள் மகிழ்ச்சி


நீரோடையை தூர்வாரும் பணிகள் மும்முரம் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Jun 2018 5:00 AM IST (Updated: 1 Jun 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நீரோடையை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மிளிதேன், எரிசிபெட்டா, காவிலோரை, இந்திராநகர், வ.உ.சி. நகர், குருக்குத்திஓடேன்துறை மற்றும் நெடுகுளா கிராம பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், முள்ளங்கி கேரட், பீன்ஸ், மேரக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள், சுகுனி, சல்லாரை, ஐஸ்பெர்க் போன்ற காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் உள்ள காய்கறி பயிர்களுக்கு அருகில் உள்ள நீரோடையையே பெரிதும் நம்பி உள்ளனர்.

காவிலோரை கிராமத்தில் இருந்து குருக்குத்தி வழியாக ஓடேன்துறை செல்லும் நீரோடை உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இதன் காரணமாக ஓடையின் அளவு சுருங்கியும் நீரோட்டம் தடைபட்டும் இருந்தது.

இதனால் மழை காலங்களில் வ.உ.சி. நகர், காவிலோரை, குருக்குத்தி ஆகிய பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. அது போன்ற நேரங்களில் பயிர்கள் அழுகி சேதம் அடைவதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே இந்த நீரோடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கடந்த ஜனவரி மாதம் ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் நீரோடையை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. ஓடையை தூர்வாரும் போது எடுக்கப்படும் மண் விளைநிலங்களில் கொட்டினால் பயிர்கள் சேதமடையும். எனவே அறுவடை செய்த பிறகு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கும் என்று கூறி பணியை நிறுத்தினர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தற்போது விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து ஏப்ரல் மாத இறுதியில் தினத்தந்தியில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நீரோடையை தூர்வாரி சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி தற்போது நீரோடையை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நீரோடையின் ஒரு பகுதி தூர்வாரப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த பணிகள் ஓரிரு வாரத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக புதர் செடிகள் மண்டிக்கிடந்த நீரோடை தூர்வாரப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story