கோவையில் வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கோவையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதனால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை
சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது. இதையொட்டி கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ராஜன், ராகவேந்திரன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள்.
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 400 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 50 தனியார் வங்கிகளில் பணிகள் முடங்கின. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணமில்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வங்கிகளின் 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய வர்த்தகர்கள் குறிப்பிட்ட ரூபாய் வரை தான் நெட்பாங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்வதற்கு வங்கிகளை அவர்கள் நாட வேண்டியிருக்கும். எனவே பெரிய வர்த்தகர்களை விட சிறிய வர்த்தகர்கள் இந்த வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து விதமான கட்டணங்களும் வங்கிகள் மூலம் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தப்படுகின்றன. வேலைநிறுத்தம் காரணமாக அந்த பணம் அரசுக்கு கிடைக்காது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்குகள் பெறுவதற்காக வர்த்தகர்கள் கொடுக்கும் காசோலைகள் வங்கிகள் மூலம் தான் பணமாக மற்ற நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படுகிறது. ஆனால் பணம் வராததால் சரக்குகள் வர்த்தகர்களுக்கு வராது. இதுபோன்ற காரணங்களினால் வர்த்தகர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story