லாரி மோதியதில் தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்தது


லாரி மோதியதில் தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 2 Jun 2018 3:45 AM IST (Updated: 2 Jun 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதியதில் தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்தது. இதில் அந்நிறுவன ஊழியர்கள் உள்பட 24 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலத்தில் எம்.ஆர்.எப்.டயர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர். இங்கு வேலைக்கு வரும் ஊழியர்கள், அந்த நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்சில் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை அந்த நிறுவன பஸ் ஒன்று 40 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.

பஸ்சை துறையூர் சிங்களாந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் சண்முகநாதன்(வயது 45) ஓட்டினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மலையப்ப நகர் பிரிவு சாலையில் பஸ் சென்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த எம்.ஆர்.எப். நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் லாரியின் முன்புறம் நொறுங்கியது. இதில் பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் பஸ்சில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயத்துடன் இருந்த பஸ் டிரைவர் சண்முகநாதன், நிறுவன ஊழியர்கள் திருவாரூர் மாவட்டம் திருக்கோலை பங்கடி பகுதியை சேர்ந்த ராஜூ மகன் பிரவீன்(21), துறையூர் எரக்குடியை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரசாந்த்(22) ஆகிய 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story