கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 2 Jun 2018 4:00 AM IST (Updated: 2 Jun 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசு பொதுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகள் திறப்பதை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி பள்ளிகள் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி நேற்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், ஒரு சில தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவ, மாணவிகளை, அவர்களுடைய பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழுப்பி புறப்பட வைத்தனர். சில மாணவ-மாணவிகள் விடுமுறை முடிந்த கவலையிலும், பலர் அடுத்த வகுப்புக்கு செல்லப்போகிறோம், நண்பர்களை மீண்டும் சந்திக்க போகிறோம் என்ற உற்சாகத்திலும் பள்ளிக்கு புறப்பட்டனர்.

குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் இரு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர். முதன் முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகள் பள்ளிக்கு போகமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறி, அழுது அடம் பிடித்தனர். இதனால் பெற்றோர் வழுக்கட்டாயமாக குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டனர்.

சில மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுடன், மாணவிகள் தோழிகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பேசியபடி பள்ளிக்கு சென்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய உடைமைகள் அடங்கிய தகர பெட்டி, வாளி உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர். அவர்களை பெற்றோர் கொண்டு வந்து விட்டனர். பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (கிழக்கு), உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் 1, 6, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இலவச பாடப்புத்தகங்கள் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. அதனை வாங்கிய மாணவ, மாணவிகள் உற்சாகமாக பக்கங்களை புரட்டி பார்த்தனர்.

மற்ற வகுப்புகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, வண்ணப் பென்சில்கள், நோட்டுகள், வரைபடப் புத்தகம் என 13 வகை பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அதிகாரி விஜயலட்சுமி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி ஆசி வழங்கினார். இந்த கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதால், அவர்கள் புதிய சீருடையில் வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் 4-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story