ராமேசுவரம் பகுதிக்கு லாரிகளில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு; கிராம மக்கள் நூதன போராட்டம்
ராமேசுவரம் பகுதிக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து அதிகாலையில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ராமேசுவரத்தை சுற்றிலும் கடல் சூழ்ந்துள்ளதால் அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் உப்புத்தன்மையுடன் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றின் தண்ணீர் தேவைக்கும் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேய்க்கரும்பு, செம்மமடம், அரியாண்குண்டு உள்ளிட்ட கிராமத்தினர் தங்கள் பகுதியில் டேங்கர் லாரிகளுக்கு குடிநீர் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நுகர்வோர் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு கூடுதலாக குடிநீர் எடுக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட அளவு தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் குடிநீர் எடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் பேய்க்கரும்பு, அரியாண்குண்டு, செம்மமடம் உள்ளிட்ட 11 கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் இருந்து ராமேசுவரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து காதில் பூ சுற்றி ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்–இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், அருண் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மனு கொடுக்க அனைவரும் தாலுகா அலுவலகத்திற்கு உள்ளே செல்வோம் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து தாசில்தார் சந்திரன் வெளியே வந்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வருகிற 11–ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.