கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகள் உற்சாகம்
கோடை விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினமே பள்ளி செல்வதற்கான ஆயத்தங்களை செய்திருந்தனர். நேற்று காலை எழுந்ததும் குளித்து சீருடை உள்ள மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து கொண்டும், சீருடை இல்லாத மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கடவுளை வணங்கி பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு பள்ளிக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து பள்ளிகள் நேற்று காலை இறைவணக்கத்துடன் தொடங்கின. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த புதிய மாணவ, மாணவிகளை சக மாணவிகள் பூ கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர். மேலும் தங்களது நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைக்கொடுத்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல குழந்தைகள் தங்களது பெற்றோரை பிரிந்து செல்ல மறுத்து நடுரோட்டில் அழுத புரண்ட காட்சிகளையும் பல்வேறு பள்ளிகளில் காண முடிந்தது. அவர்களை பெற்றோர்கள் சமதானப்படுத்தி பள்ளியில் விட்டு சென்றனர். மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் சில மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பெட்டி, படுக்கைகளுடன் வந்திருந்தனர்.
புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வகுப்புகள் தொடங்கியவுடன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெட்லாராணி வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வீரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு அரசுபள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. நீங்கள் படிக்கும் இந்த அரசு பள்ளியில் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் கூடிய கட்டிட வசதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் உங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்களது பகுதியினை சேர்ந்த அனைத்து பிள்ளைகளையும் சேர்த்து அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வழிகாட்டவேண்டுகிறேன். என்றார். இதில் மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமசாமி, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, மதியநல்லூர், வீரப்பட்டி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நமணசமுத்திரம், அரிமளம், திருமயம், கந்தர்வகோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, காரையூர், கீரனூர், விராலிமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு நேற்று காலையில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மட்டும் வருகிற 4-ந் தேதி திறக்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story