திருப்புவனம் அருகே பள்ளி தலைமையாசிரியை மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டம்


திருப்புவனம் அருகே பள்ளி தலைமையாசிரியை மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:30 AM IST (Updated: 2 Jun 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இதன்பேரில் பள்ளியை தரம் உயர்த்துவதற்கு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்காக கிராமமக்கள் சார்பில் பங்குத்தொகையாக ரூ.1 லட்சம் அரசுக்கு கட்டினர். இதைதொடர்ந்து அதிகாரிகள் அரசுக்கு கருத்துரைகள் அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் லதாவிடம் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் இந்த பள்ளியின் தலைமையாசிரியை ரமாமணி பள்ளியை தரம் உயர்த்த ஒத்துழைப்பு வழங்காமல் ஏதேச்சையாக செயல்படுவதாகவும், அவரை வேறு இடத்திற்கு மாற்றம் வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இல்லையெனில் 2018–19 கல்வியாண்டில் மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது இல்லை என தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கலியாந்தூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியை ரமாமணி மற்றும் 6 ஆசிரியர்கள், ஒரு பெண் ஆசிரியை ஆகிய 8 பேர் வந்தனர். ஆனால் காலை 9 மணி ஆகியும் மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அதற்கு மாறாக மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள், கிராம மக்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து தலைமையாசிரியை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ‌ஷகிதா, பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பிரான்சிஸ்ஜஸ்டின், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சில நாட்களில் தலைமையாசிரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பள்ளி திறந்த முதல் நாளே கிராம மக்கள் பள்ளியில் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story