ஊட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


ஊட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:15 AM IST (Updated: 2 Jun 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளது.

ஊட்டி,

அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், கிராம அஞ்சல் ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த 22–ந் தேதி முதல் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராம அஞ்சல் ஊழியர்கள் ஊட்டியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை தபால் அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கோட்ட செயலாளர் சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சந்திரன், சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரேச்சல் மோசஸ், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கிராம அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் குறித்து சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:–

அகில இந்திய அளவில் கிராம அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், எங்களது போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கிளை தபால் அலுவலகங்களும் கடந்த 11 நாட்களாக பூட்டு போட்டு மூடப்பட்டு உள்ளன. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் வேலைக்கான அழைப்பு கடிதம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய தபால்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கிராமங்களில் உள்ள கிளை தபால் அலுவலகங்கள் மூலம் தான் 60 சதவீத வருமானம் துணை தபால் அலுவலகம் மற்றும் தலைமை தபால் அலுவலகத்துக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story