‘ஒகி’ புயலில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு விரைவில் அரசு வேலை - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


‘ஒகி’ புயலில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு விரைவில் அரசு வேலை - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2018 5:00 AM IST (Updated: 2 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விரைவில் வழங்கப்படும் என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயகுமார் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருமாறு அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது, உயிரிழந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி சத்துணவு மையங்களில் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் வேலை விரைவில் வழங்கப்படும்‘ என்றார்.

உடனே கூட்டத்தில் இருந்த மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

கோவளம் அருகே பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். முதலில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் இரவு அனுமதியை போலீசார் ரத்து செய்தனர். மேலும் 2 ஆயிரம் போலீசாரை கொண்டு எங்களை நாகர்கோவில் வர விடாமல் தடுத்தனர். அதோடு மட்டும் அல்லாது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அன்றைய தினம் எங்கள் ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. நாங்கள் வாகனங்களில் செல்லவும் அனுமதியளிக்கவில்லை. ஆனால் இதற்கு முன் துறைமுக ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிகிறது. மேலும் துறைமுகம் அமைய 90 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் ஆதரவு இயக்கத்தினர் கூறி வருகிறார்கள். அதே சமயத்தில் எங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிப்பது இல்லை.

ஒகி புயலுக்கு பின்னரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது தான் மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் மீனவர்கள் அந்தந்த பகுதிகளில் கரை சேர வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக அவர்கள் படகில் வேகமாக கரைக்கு திரும்புவதால் எதிர்பாராத விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக பகுதியில் 2 மீனவர்கள் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கிவிட்டனர். எனவே மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இதுவரை கரை சேராத மீனவர்கள், அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே கரை சேர அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மீனவ பிரதிநிதிகள் வைத்தனர்.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

என்னை பார்க்க எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரலாம். அதற்கு என்றும் அனுமதி மறுக்கப்படாது. ஆனால் துறைமுக எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டிருந்த தினத்தில், துறைமுக ஆதரவாளர்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

துறைமுக விவகாரத்தில் எந்த தரப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமானோர் பங்கேற்கிறார்கள், எந்த தரப்பு நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் குறைவானவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பதை மாவட்ட நிர்வாகம் பார்ப்பது இல்லை. இதற்கு முன் நடைபெற்ற துறைமுக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்ததால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக நினைக்க வேண்டாம். துறைமுகத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்றும், எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியும். எனவே தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

துறைமுக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரச்சினை ஏற்படும் என்று கருதியதால் அங்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் துறைமுக எதிர்ப்பாளர்களை வாகனங்கள் மூலம் கலெக்டர் அலுவலகம் வர எப்படி அனுமதிக்க முடியும்?

மீன்பிடி தடைகாலம் தொடங்கி விட்டது. எனினும் இன்னும் கரை சேராத மீனவர்களின் விவரங்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story