மாவட்டம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு


மாவட்டம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 2 Jun 2018 4:15 AM IST (Updated: 2 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்ததை காண முடிந்தது.

நாமக்கல்

பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து வகையான அரசு பள்ளிகளும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் நேற்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன.

இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்வதை காண முடிந்தது. தமிழக அரசின் உத்தரவுபடி பள்ளி திறந்த முதல் நாளான நேற்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை போன்றவை வழங்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் இறைவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்பழகி தலைமையில் நடந்த இறைவணக்கம் நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் நன்னடத்தை உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். நேற்று முதல்நாள் என்பதால் பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் முன்னதாக கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் கோவில்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. ஒருசில தனியார் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோகனூர் ஒன்றியம் பனமரத்துப்பட்டி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் மோகனூர் வட்டார உதவிதொடக்க கல்வி அலுவலர் அருள்மணி கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார். மாணவ மாணவிகள் புதிய சீருடை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதி தலைமை தாங்கினார். ஒய்வு பெற்ற ஆசிரியர் சங்கரன், பள்ளி ஆசிரியர்கள் பாப்பாத்தி, புவனேஸ்வரி மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று 2018-19-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு நடந்த வரவேற்பு விழாவில், வட்டார கல்வி அலுவலர் ராஜவேல் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.

எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து புதிதாக பள்ளிக்கு சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவர்கள் மேளதாளத்துடன் அழைத்து வரபட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள், ரோஜா பூ வழங்கி கரகோஷத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Next Story