சினிமாவில், போராட்டம் நடத்துவதுபோல் நடிக்கும் ரஜினிகாந்த், நிஜ வாழ்க்கையில் போராட மறுக்கிறார் முத்தரசன் குற்றச்சாட்டு
சினிமாவில், போராட்டம் நடத்துவதுபோல் நடிக்கும் ரஜினிகாந்த், நிஜ வாழ்க்கையில் போராட மறுக்கிறார் என திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
திருவாரூர்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில்லை. இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்படையும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு திசை திருப்பும் முயற்சிகளை மேற்கொள்ள கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், சம்பவத்திற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சட்டமன்றத்தை புறக்கணித்துள்ளது சரியான நடவடிக்கை தான். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பேசி தி.மு.க.வை குற்றம் சாட்டி வருகிறார்.
ஸ்டெர்லைட் போராட்டங்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருப்பது மோசமானது. தமிழக அரசு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த், திரைப்படங்களில் போராட்டம் நடத்துவது போன்று நடித்து வருகிறார். ஆனால், நிஜ வாழ்க்கையில் போராட மறுக்கின்றார். தற்போது மக்கள், போராட்டத்தின் மூலமாகத்தான் வெற்றி பெறுகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்துள்ளது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் சரிவர நடைபெறவில்லை. விவசாய தொழிலாளர்கள் நாடோடிகளாகவும், அனாதைகளாகவும் உள்ளனர். எனவே இத்திட்டத்தின் நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும்.
பா.ஜனதா கட்சி தேர்தலில் தோல்வியடைந்து இருப்பது நாட்டு மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story