பிரதமர் மோடி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை பெஜாவர் மடாதிபதி பேட்டி


பிரதமர் மோடி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை பெஜாவர் மடாதிபதி பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2018 5:52 AM IST (Updated: 2 Jun 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று பெஜாவர் மடாதிபதி விசுவேச தீர்த்த சுவாமி தெரிவித்தார்.

பெங்களூரு,

உடுப்பி பெஜாவர் கிருஷ்ண மடத்தில் வைத்து மடாதிபதி விசுவேச தீர்த்த சுவாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை பின்பற்றாமல், பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயன்றன. இதுபோன்ற செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்து செயல்பட்டு வருகின்றன. அதேப் போல் இந்தியாவிலும் அனைத்து கட்சிகளும் சேர்ந்த கூட்டணி ஆட்சி முறையை கொண்டுவரலாம். இதனால் வளர்ச்சிப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. மோடி பிரதமரானால், தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என மக்கள் நம்பினர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேலும் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு தருவதாக சொன்னார். அதை செய்யவில்லை. அதேப் போல் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மத்திய அரசு இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ரத்து மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை கொண்டு வந்துள்ளது. ஆனால் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை பாதுகாக்கவும், விவசாய மேம்பாட்டுக்கும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளையில், கங்கை நதி சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இன்னும் ஒரு ஆண்டு பதவிக்காலம் உள்ளது. அந்த ஒரு ஆண்டு காலத்திற்குள் விவசாய மேம்பாட்டுக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் மதிப்பீடு தான் சமீபத்தில் நடந்த 2 எம்.பி., 11 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ரம்ஜான் இப்தார் விருந்து நிகழ்ச்சி பெஜாவர் கிருஷ்ண மடத்தில் நடக்குமா? என்று விசுவேச தீர்த்த சுவாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “நான் அனைத்து மதத்தினரையும் மதிக்க கூடியவன். அதே வேளையில் இந்து மதத்திற்கு பிரச்சினை என்றால், அதை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயங்கியதில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் விரும்பினால், இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் விருந்து நிகழ்ச்சி கிருஷ்ணா மடத்தில் நடத்தப்படும்“ என்றார். 

Next Story