மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கைது


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
x
தினத்தந்தி 3 Jun 2018 4:30 AM IST (Updated: 3 Jun 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. அதாவது இந்த ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

இந்த ஆற்றின் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பிலான விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியது.

மணல் குவாரி தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் குவாரி அமைக்க கூடாது என்று ஊத்துக்கோட்டை பொதுமக்கள் ஏற்கனவே ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இருப்பினும் மணல் குவாரி தொடங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் தி.மு.க.வினர் கடந்த மாதம் 17-ந் தேதி ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மணல் குவாரி தொடங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணல் எடுத்து செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் குவாரி அமைய உள்ள பகுதியில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று குவாரி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் ஊத்துக்கோட்டை நகரம் மற்றும் மணல் குவாரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்்டத்தில் ஈடுபட முயன்ற தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அபிராமி, நகர செயலாளர் அப்துல்ரஷீத், இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல் ரகீம், தாராட்சி கிளை செயலாளர் கார்த்திக், மகளிர் அணியை சேர்ந்த சாந்தி, பா.ஜ.க. நகர செயலாளர் தயாளன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல் ரெட்டித்தெருவில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் தடுப்புகள் அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கு போடப்பட்ட தடுப்புகளை அகற்றினர். இதன் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் இடையே ½ மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது.

Next Story