விடுப்பு எடுக்க அனுமதி வழங்க கோரி மண்ணெண்ணை பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்
விடுப்பு எடுக்க அனுமதி வழங்க கோரி மண்ணெண்ணை பாட்டிலுடன் டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் இருந்து ஒடையகுளம் செல்லும் டவுண் பஸ்சை ஓட்டி வந்தார். இந்த நிலையில் அதிகாரிகள் கோவை செல்லும் பஸ்சில் செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் ஒடையகுளம் செல்லும் பஸ்சை ஓட்ட அனுமதி கேட்டதற்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் விடுப்பு எடுக்க அனுமதி கேட்டும் கொடுக்காததால் பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் உயர் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினார். மேலும் போக்குவரத்து கழகத்திற்குள் ஒரு பஸ் சென்ற போது, அதன் அருகில் படுத்து உருண்டு கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:–
கோவைக்கு செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும் என்று அவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி உள்ளார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.