பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும் - முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நிதி சம்பளம் கொடுக்க மட்டும் இல்லை என்று கூறியுள்ளார். இதை அவருடைய சொந்த கருத்தாக கூறியுள்ளார். மக்களின் கருத்து இல்லை. மத்திய அரசு நடத்தும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கிக்கு ரூ.840 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் பல மத்திய அரசின் நிறுவனங்கள் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளன.
கவர்னரின் கருத்தை ஏற்றால் பிரதமர் மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பூட்டு போட்டு சீல் வைக்க வேண்டும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் கவனத்தோடு கருத்துக்களை கூற வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அரசு நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தனியாருடன் போட்டி போட்டுக்கொண்டு லாபம் ஈட்ட முடியாது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கையாளும் முறை தவறு. காங்கிரஸ் ஆட்சியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யும் முறை இருந்து வந்தது. பிரதமர் மோடி அதை 15 நாட்களுக்கு ஒருமுறை என்றும் தற்போது தினந்தோறும் விலைநிர்ணயம் என்றும் மாற்றியுள்ளார். தற்போது எண்ணை நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது பெட்ரோல், டீசலை குறைந்த விலைக்கு விற்றது.
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை செல்லாத 1 பைசா, 4 பைசா, 5 பைசா என குறைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்.
சென்னையில் இருந்து புதுவைக்கு வரும் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்னை சந்தித்து பேசினர். இந்த சாலை மகாபலிபுரத்தில் இருந்து புதுவை பல்கலைக்கழகம், ஊசுடு ஏரி, உளவாய்க்கால், வில்லியனூர் வழியாக விழுப்புரம்–நாகப்பட்டினம் சாலையை அடைய உள்ளது. இதன் மூலம் புதுவையில் இருந்து 1½ மணிநேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து சபாநாயகரின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் உள்ள அரசுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்க விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முழுமையான அறிக்கை தாக்கல் செய்ததும் புனரமைப்பு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.