ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு நடைமேடையை விரிவாக்கம் செய்ய உத்தரவு


ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு நடைமேடையை விரிவாக்கம் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2018 4:30 AM IST (Updated: 3 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது நடைமேடையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான கழிப்பறை, மேம்பால நடைமேடை உள்ளிட்டவைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் டிக்கெட் வழங்கும் இடம், இருப்பு பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது கோட்ட மேலாளர் நிருபர்களிடம் கூறுகையில், மொரப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் எவ்வித சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் மின் விளக்கு வசதி செய்து தரப்படும். அதேபோல கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும். மொரப்பூர்-தர்மபுரி ரெயில் தடம் விரைந்து அமைப்பது தொடர்பாக தென் மேற்கு ரெயில்வே அலுவலகத்திற்கு தேவையான அழுத்தங்களை அளித்து வருகிறோம்.

செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயண சீட்டுகளை பயணிகள் பதிவு செய்யலாம். இதனால் பயணிகள் ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று முன்பதிவற்ற பயண சீட்டுகளை பெறுவதை தவிர்க்கலாம் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மொரப்பூர் ரெயில் நிலையத்தின் நடைமேடையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், கோட்ட செயல்பாடுகள் மேலாளர் பூபதி ராஜா, கோட்ட மின் பொறியாளர் அரவிந்த், கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் மக்கள் தொடர்பு அலுவலர் முத்துகுமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story