அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல் : அரசு பள்ளி ஆசிரியைகள் உள்பட 4 பேர் சாவு


அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல் : அரசு பள்ளி ஆசிரியைகள் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2018 4:53 AM IST (Updated: 3 Jun 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே நேற்று காலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அரசு பள்ளி ஆசிரியைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கலபுரகி,

கலபுரகியில் இருந்து நேற்று காலையில் தாவணகெரே நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சகாப்புரா-ஜீவர்கி சாலையில், ஜீவர்கி அருகே சென்றபோது எதிரே யாதகிரி மாவட்டம் சகாப்புராவில் இருந்து அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடிவந்தது. நாய் மீது மோதாமல் இருக்க 2 பஸ் டிரைவர்களும் பஸ்களை திருப்பினர். அப்போது, எதிர்பாராத விதமாக டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. மேலும், தறிகெட்டு ஓடிய ஒரு அரசு பஸ் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதனால், பஸ்களில் பயணித்த பயணிகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஜீவர்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2 பஸ்களிலும் பயணித்த 20 பயணிகள் காயம் அடைந்து இருப்பதும், ஒரு பஸ்சின் டிரைவர் மற்றும் 3 பெண்கள் படுகாயமடைந்து இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அவர்களை ஜீவர்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், 2 பேரின் உடல்நலம் மோசமாக காணப்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக கலபுரகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜீவர்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஜீவர்கி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இறந்த 3 பெண்களும் அரசு பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் கலபுரகி டவுன் மெகபூப் நகரை சேர்ந்த ஆயிஷா சித்திக்(வயது 38), நூரானி மொகல்லாவை சேர்ந்த பரினா பேகம்(36), ஆனந்த் நகரை சேர்ந்த சகாரா தாகூல்(39) ஆகியோர் என்பதும், அவர்களில் ஆயிஷா சித்திக், பரினா பேகம் ஆகியோர் சிகரதிஹள்ளியில் உள்ள அரசு பள்ளியிலும், சகாரா தாகூல் யலவாராவில் உள்ள அரசு பள்ளியிலும் ஆசிரியைகளாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், கலபுரகியில் இருந்து தாவணகெரே நோக்கி சென்ற பஸ்சை ஓட்டிய ருக்ரப்பா(45) என்ற டிரைவர் இறந்திருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஜீவர்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story