மாணவர்கள் அமைத்த நவீன தோட்டம்
டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மண் இல்லா விவசாய தொழில் நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பைப்புகளை வரிசையாகவும், அடுக்குகளாகவும் கட்டமைத்து அதில் ஆங்காங்கே துளையிட்டு செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவைகளை பராமரிக்கும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வாரம் ஒருமுறை வீட்டில் இருந்து செடிகளை கொண்டு வந்து வளர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக பள்ளியில் ஈகோ கிளப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் இத்தகைய மாற்றங்கள் உருவாகுவதற்கு வித்திட்டவர் ஆசிரியர் மனோஜ் குமார். அவர் சொல்கிறார்.
‘‘நான் இந்த பள்ளிக்கு வந்தபோது ஒரு செடி கூட பள்ளி வளாகத்தில் இல்லை. மாணவர்களிடம் மரம் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தினேன். வீட்டில் இருந்து செடிகள் கொண்டு வந்து நடவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
வாரத்திற்கு குறைந்தபட்சம் 170 செடிகளையாவது பள்ளி வளாகத்தில் நடவேண்டும் என்று தீர்மானித்தோம். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மண்ணில்லா விவசாய தொழில் நுட்பத்தை கையாண்டோம். அந்த முயற்சி மாணவ-மாணவிகளுக்கு செடிகள் வளர்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது. இந்த விவசாய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த இடத்தில் ஏராளமான செடிகளை வளர்த்துவிடலாம்.
பாரம்பரிய முறையை விட இத்தகைய செடிகளுக்கு குறைவான நீரே தேவைப்படும். அதிக ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை இதில் விளைவிக்கலாம். முட்டைக்கோஸ், குடமிளகாய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி போன்ற பல வகை காய்கறி செடிகள் வளர்க்கப்படுகின்றன. அந்த செடிகளை மாணவர்களே பராமரிப்பதால் காய்கறிகள் விளைந்ததும் அவர்களுக்கே கொடுத்து வருகிறோம். அதனால் உற்சாகமாக வேலை செய்கிறார்கள்’’ என்கிறார்.
Related Tags :
Next Story