சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மச்சாவு பெற்றோருக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு


சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மச்சாவு பெற்றோருக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 3:00 AM IST (Updated: 4 Jun 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடன்குடி,

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ கல்லூரி மாணவி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). இவர் குடும்பத்துடன் பொள்ளாச்சியில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மூத்த மகள் உதயபிரியா (21), சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவருடைய அத்தை, அதாவது ஜெய்சங்கரின் அக்காள் அழகுமணி வீட்டில் தங்கி இருந்து மருத்துவ கல்லூரிக்கு சென்று வந்தார்.

கடந்த 1–ந் தேதி உதயபிரியா மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும், அப்போது கம்பி வயிற்றில் குத்தி உதயபிரியா இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே அழகுமணி, அவருடைய மகன் சவுந்தரராஜ், மகள் சவுந்தரசெல்வி ஆகிய 3 பேரும் ஒரு காரில் உதயபிரியா உடலை ஏற்றினர். சென்னையில் இருந்து உடன்குடி புதுமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெய்சங்கரின் தாய் கனி அம்மாள் வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனை

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கனி அம்மாள், ஜெய்சங்கருக்கு தகவல் கொடுத்தார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர், குலசேகரன்பட்டினம் போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய மகள் உதயபிரியா சாவில் மர்மம் உள்ளது என்றும், எனவே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர், உடன்குடிக்கு விரைந்து சென்றார்.

தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உதயபிரியா உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், உதயபிரியா வயிற்றில் கம்பி குத்தப்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறியதால் இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சாவில் மர்மம் இருப்பதாக புகார்

இதையடுத்து ஜெய்சங்கர் தன்னுடைய மகள் உதயபிரியா சாவில் மர்மம் இருப்பதாகவும், என் மகள் இறந்தவுடன் எனக்கு தகவல் சொல்லாமல் சென்னையில் இருந்து உடன்குடிக்கு கொண்டு வந்து எனது தாயார் கனி அம்மாளிடம் உடலை கொடுத்தது ஏன்? என்றும், மாடியில் இருந்து விழுந்தவுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கோ அல்லது போலீசுக்கோ தகவல் கொடுக்காதது ஏன்? என்பது உள்பட பல்வேறு சந்தேகங்களுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


Next Story