தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: பலியான மாணவி சுனோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: பலியான மாணவி சுனோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 3:30 AM IST (Updated: 4 Jun 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி சுனோலின் உடல் நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் 3 ஆயிரம் பங்கேற்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி சுனோலின் உடல் நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் 3 ஆயிரம் பங்கேற்றனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதில் 7 பேரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரது உடல்கள் அப்படியே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுப்படி 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 6 பேரது உடல்கள் மட்டுமே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

மாணவி உடல் ஒப்படைப்பு

மாணவி சுனோலின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால், அவரது உடல் மட்டும் மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. சுனோலின் உறவினர்களிடம், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. சுனோலின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.

நேற்று காலையில் சுனோலின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அலுவலர்களும் வந்தனர். அதன்பிறகு சுனோலின் உடல் அவருடைய தந்தை ஜாக்சனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு அறிவித்து உள்ள இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

பின்னர் பறக்கும்படை தாசில்தார் நல்லசிவம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுனோலின் உடல் ஒரு வேனில் ஏற்றப்பட்டு அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. தருவை மைதானம் அருகே சென்ற போது பாதுகாப்புக்காக வந்த போலீசார் அனைவரும் நிறுத்தப்பட்டனர்.

அடக்கம்

அதன்பிறகு சுனோலின் உடலை உறவினர்கள் மட்டும் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு உள்ள சகாயமாதா ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது.

அங்கிருந்து சுனோலின் உடல் ஊர்வலமாக ஜார்ஜ் ரோட்டில் உள்ள மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொண்டனர். போலீசார் யாரையும் அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

6 பேர் உடல்கள்

இந்தநிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படாத ரஞ்சித்குமார், அந்தோணிசெல்வராஜ், ஜான்சி, கிளாட்சன், ஜெயராமன், மணிராஜ் ஆகிய 6 பேரது உடல்களையும் எப்போது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவிக்கும். அதன்பிறகு 6 பேரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story