திருமங்கலம் அருகே கத்திக்குத்து சம்பவத்தில் கணவர் சாவு
திருமங்கலம் அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் கணவர் இறந்தார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பையா (வயது25) மைசூரில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களாகிறது. திவ்யா 5 மாதகர்ப்பிணியாக உள்ளார். இருவரும் இரவு திருமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கண்டுகுளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கண்டுகுளத்தை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவர் தாழைமுத்தையா கோவில் அருகே கணவன் மனைவி இருவரையும் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். திருமங்கலம் நகர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா இறந்தார்.
மனைவி திவ்யா தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து திவ்யாவின் தயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்தனர். தொடர்ந்து பாலமுருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பாலமுருகன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்ததாகவும், தனக்கு திவ்யாவை திருமணம் செய்ய, பெண் கேட்ட போது, தரமறுத்ததாக கூறப்பட்டதாம். அதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் கண்டுகுளத்திற்கு வந்த போது கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.