விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தொழிலாளர்கள் நேற்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், மற்றும் சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் 6 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி சுமார் 7ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், பாவு ஒட்டுதல், சாய பட்டறை, நூல் கண்டு போடுபவர்கள் என மறைமுகமாக 8 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்படும். கடந்த 2016–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி 100 மீட்டர் துணி உற்பத்திக்கு ரூ.76–ம், கடந்த ஆண்டு ரூ.82–ம், இந்த ஆண்டு ரூ.87–ம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கடந்த 1–ந்தேதி கூலி உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில் தற்போது வரை மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் உயர்த்தப்பட்ட கூலியை வழங்கவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 27–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கூலி உயர்வு தொடர்பாக மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டது.
அதில் ஒரு உடைக்கு ரூ.3.50 காசு, சிறு,குறு விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு 7 பைசா எனவும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதை தொடர்ந்து விசைத்தறிகள் இயங்க தொடங்கின.