அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மெத்தனம்: மின் இணைப்பு இல்லாமல் முடங்கி கிடந்த நவீன ஸ்கேன் எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர மின்வாரிய அதிகாரி நடவடிக்கை


அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மெத்தனம்: மின் இணைப்பு இல்லாமல் முடங்கி கிடந்த நவீன ஸ்கேன் எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர மின்வாரிய அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2018 3:30 AM IST (Updated: 4 Jun 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மின் இணைப்பு இல்லாமல் முடங்கி கிடந்த அதிநவீன ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விருதுநகர்,

தமிழக அரசு, ஏழை–எளிய மக்களுக்கும் நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிநவீன மருத்துவ கருவிகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான அதிநவீன ஸ்கேன் எந்திரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த நவீன ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கார் நிறுத்தும் பகுதியில் முடக்கி வைத்து விட்டனர். இந்த நவீன எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்துவிட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி கூறிய பின்னரும், எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் முடக்க நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நவீன ஸ்கேன் எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருந்தால் அந்த எந்திரம் வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்று உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட பின்னர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அந்த எந்திரம் பொருத்தப்பட்டது. ஆனாலும் அதற்கான மின்இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் தொடர்ந்து முடக்க நிலையிலேயே ஆஸ்பத்திரி அதிகாரிகள் வைத்திருந்தனர்.

இந்த பிரச்சினை குறித்து விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) லதாவிடம் எடுத்து கூறிய தினத்தந்தி நிருபரிடம் அவர் தெரிவித்ததாவது:–அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 2013–ம் ஆண்டு விதிமுறைப்படி 1–க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கமுடியாது என்றும், உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது என அரசு ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது அந்த ஆண்டு மேலும் ஒரு மின்இணைப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழக அரசு உயர் அழுத்த மின் இணைப்பு வழங்குவதற்கான அனுமதியினை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியதோடு, அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் செய்து தந்ததாக கூறப்பட்டது. தற்போது நவீன ஸ்கேன் எந்திரத்துக்கான மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த போது ஒரே இணைப்பாக பெற்றுக்கொள்ளுமாறு அரசு ஆஸ்பத்திரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்குவதில் மின்வாரிய தரப்பில் கால தாமதம் ஏதும் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் கடந்த 6 மாதங்களாக முடக்க நிலையில் உள்ள அதிநவீன ஸ்கேன் எந்திரம் மின் இணைப்பு இல்லாமல் மேலும் முடக்க நிலையில் இருந்தால் எந்திரத்தின் செயல்திறன் குறைந்துவிடும் என்றும் மக்களின் பயன்பாட்டிற்கு அதிநவீன ஸ்கேன் எந்திரம் அவசியமானது என்றும் அவர் நம்மிடம் தெரிவித்ததோடு, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்பு கொண்ட மின் வாரிய அதிகாரி லதா, அதிநவீன ஸ்கேன் எந்திரத்துக்கு மின் இணைப்பு வழங்குவற்கான விண்ணப்பத்தினை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெற்று இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் பயன்பாட்டிற்காக அதிநவீன ஸ்கேன் எந்திரத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரிய அதிகாரி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story