புதுச்சேரி சட்டசபையில் முதியோர் பென்சன்–இலவச அரிசி குறித்து விவாதிக்க வேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்


புதுச்சேரி சட்டசபையில் முதியோர் பென்சன்–இலவச அரிசி குறித்து விவாதிக்க வேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:30 AM IST (Updated: 4 Jun 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

முதியோர் பென்சன், இலவச அரிசி குறித்து சட்டமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூடுவதையொட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்வது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் ஆலோசனைப்படி புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. மக்கள் நலன்கருதி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். கவர்னர், முதல்–அமைச்சரின் மலிவு விளம்பர மோதல் போக்கினால் அரசு நிர்வாகம் முழுமையாக சீர்கெட்டு உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் முழுமையாக கவர்னரால் பறிக்கப்பட்டுள்ளது.

இலவச அரிசி, சிவப்பு ரேசன்கார்டு பிரச்சினை, மருத்துவக்கல்லூரிகளில் புதுவை அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, குப்பை வரி, மின்சாரம், குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தபட்சம் 23 நாட்களாவது நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்.

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த பணிகள் செய்யப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பக்கத்து மாநிலங்களின் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் செயல் தொடர்ந்து நடக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆனாலும் 7 முறைதான் இலவச அரிசி போடப்பட்டுள்ளது. முதியோர் பென்சன் வழங்கக்கோரி 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒருவருக்குக்கூட பென்சன் தரப்படவில்லை. முதியோர் பென்சன், இலவச அரிசி தொடர்பாக சட்டமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க ஒத்திவைப்பு பிரேரணை கொடுத்துள்ளோம். அதை எடுத்து விவாதிக்க சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story