மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது வேனை ஏற்றி கொல்ல முயற்சி


மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது வேனை ஏற்றி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது வேனை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதி காவிரி கரையோர கிராமங்களில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின்பேரில், முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார் மேற்பார்வையில், தொட்டியம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை சீனிவாசநல்லூர் பகுதியில் மணல் கடத்தி வந்த ஒரு சரக்கு வேன் மற்றும் காடுவெட்டி, காரைக்காடு பகுதிகளில் மணலை மூட்டைகளாக கட்டி கடத்திச்சென்ற 3 சரக்கு வேன்களையும் அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று எம்.புத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், ஏழூர்பட்டி கிராம உதவியாளர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் மேலக்காரைக்காட்டில் இருந்து மணல் கடத்திச்சென்ற ஒரு சரக்கு வேனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. இதையடுத்து அந்த வேனை சதீஷ்குமாரும், ராஜேந்திரனும் ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். மாராச்சிபட்டி அருகே சென்ற போது சரக்கு வேனில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தொட்டியம் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், கிராம நிர்வாக அதிகாரியை கொல்ல முயன்று தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரியை வேனை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story