பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு


பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 4 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். எவ்வித செலவினமும் இல்லாமல் மாணவ, மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

இந்த விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க அழைப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்க தேவையில்லை.

தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

Next Story