தளி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்


தளி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:21 AM IST (Updated: 4 Jun 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

தளி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுப்பதற்காக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை நீராதாரமாக கொண்டு பி.ஏ.பி. மற்றும் ஏழுகுளம் பாசனத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பி.ஏ.பி. பாசனத்திட்டத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும், ஏழுகுளம் பாசனத்திற்கு தளி வாய்க்கால் மூலமாகவும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தளி வாய்க்காலில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சிலர், முறைகேடாக குழாய்களை பதித்து, அதன் மூலமாக வாய்க்காலில் தண்ணீர் வரும்போது அவற்றை உறிஞ்சி திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அணையில் இருந்து தளி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக ஏழுகுளங்களுக்கு சென்று சேருவதில்லை.

அதனால் ஏழுகுளங்களை அடிப்படையாக கொண்ட பாசன பகுதியில் விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக கரும்பு, வாழை உள்ளிட்ட நீண்டகால பயிர்களின் சாகுபடி பரப்பளவும் ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இதையடுத்து தளி வாய்க்காலில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றும்படி ஏழுகுளம் பாசன விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தளி வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் குழாய்களை அகற்றிக்கொள்ளவில்லை.

இதனால் கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தளி வாய்க்கால் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்ற சென்றனர். அப்போது அவர்களை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குழாய்களை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் தளி வாய்க்காலில் முறைகேடாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குழாய்கள் அமைத்துள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கால்வாயில் அமைக்கப்பட்ட குழாய்களை சம்பந்தப்பட்ட நபர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துவிட்டுச்சென்றனர்.

Next Story