கிணற்றை மூட எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்த விவசாயி


கிணற்றை மூட எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்த விவசாயி
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றை மூட எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்த சவரிமுத்து மகன் பாஸ்கர்ராஜா (வயது 27). விவசாயி. இவர் நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாஸ்கர்ராஜா கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலம் சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து தான் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்ந்து வருகிறோம். அந்த பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப்போவதாக கூறினார்கள். இதனால் எங்கள் நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த போவதாக அதிகாரிகள் கூறினர். அந்த இடத்தின் அருகில் தான் விவசாய கிணறும் உள்ளது.

நிலத்தை கையகப்படுத்திவிட்டு, கிணற்றையும் மூடிவிடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் கிணற்றை மட்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கிணறு இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றை மூடாமல் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

பின்னர் முன்அனுமதி பெறாமல் இதுபோல போராட்டம் நடத்துவது சட்டப்படி தவறு. அனுமதி பெற்றுவிட்டு போராட்டம் நடத்துங்கள் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து தங்களுடைய கோரிக்கை குறித்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் மனு அளித்துவிட்டு அவர்கள் சென்றனர். கடந்த மாதம் 7–ந்தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஸ்கர்ராஜா தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.


Next Story