அரசு ஊழியர்களுக்காக சென்னை அண்ணாநகரில் 606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்


அரசு ஊழியர்களுக்காக சென்னை அண்ணாநகரில் 606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்
x
தினத்தந்தி 5 Jun 2018 5:15 AM IST (Updated: 5 Jun 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுது காரணமாக இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்த வாடகை குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல திருவள்ளூர் மாவட்டம் எலாவூரில் ரூ.23 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமை செயலகத்தில் திறந்துவைத்தார். மேலும் ரூ.381 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 3 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் 2 புறவழிச்சாலைகளுக்கும் அடிக் கல் நாட்டினார்.

ஆவடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Next Story