துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது ஏன்? தேசிய மனித உரிமை ஆணையத்தினர் துணை தாசில்தார்களிடம் விசாரணை


துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது ஏன்? தேசிய மனித உரிமை ஆணையத்தினர் துணை தாசில்தார்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது ஏன்? என்பது குறித்து துணை தாசில்தார்களிடம் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் விசாரணை நடத்தினார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கிசூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் போலீஸ் சூப்பிரண்டு புபுல் தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால் பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கிசூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

நேற்று 3-வது நாளாக தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை நடத்தியது. இதற்காக கடந்த 22-ந் தேதி 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று 9 பேரும் தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜர் ஆனார்கள். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது குறித்தும் அவர்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர்களிடம் மனித உரிமை ஆணையக்குழுவினர் விசாரணை நடத்தினர். ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதியையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் நேற்று மதியம் தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு விசாரணைக்காக ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் சம்பவம் குறித்தும், போலீசார் தாக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். 

Next Story