18 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


18 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 5 Jun 2018 4:00 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

18 ஆண்டுகளுக்கு பிறகு ஆரியூர் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மோகனூர்,

மோகனூர் ஒன்றியம் ஆரியூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆரியூர், நெய்க்காரன்பட்டி, தோப்பூர், கொளத்தூர், மோளக்கவுண்டன்புதூர், சிங்கயகவுண்டன்புதூர், மூங்கில்பட்டி உள்ளிட்ட 8 ஊர்களுக்கு பாத்தியப்பட்டது ஆகும். இங்கு 2000-ம் ஆண்டில் நடந்த திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் கலந்து பேசி சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

குண்டம் திருவிழா

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலுக்கு நடந்து வந்தனர். அதன்பிறகு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த குண்டம் இறங்கும் இடத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க் கிழமை) காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், கிடாவெட்டு, மாலை வண்டிவேசமும், இரவு 7 மணிக்கு பாட்டுக்கு பாட்டு பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இரவு கம்பம் பிடுங்கி ஊர் கிணற்றில் விடப்படுகிறது. நாளை(புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் 8 ஊர் பொதுமக்களும் உற்சாகத்துடன் கொண்டினார்கள். 

Next Story