டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து 218 மனுக்கள் வரப்பெற்றன. இதனை பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தின் போது, கரூர் அருகேயுள்ள சணப்பிரட்டி, மூலக்காட்டானூர், வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் சுமார் 1,000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில் மூலக்காட்டானூரில் ஒரு பெட்ரோல் பங்க் எதிரே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அந்த பகுதி வழியாக செல்லும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மதுகுடிப்போரால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்பு இந்த இடத்தில் இயங்கிய டாஸ்மாக் கடையினால் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவங்கள் உள்ளிட்டவை அரங்கேறின. எனவே இந்த இடத்தில் மீண்டும் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் எண்ணத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் தாந்தோன்றிமலை சின்னமநாயக்கன்பட்டி காலனி, மூக்கணாங்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதன் காரணமாக வீடுகளுக்கு குடிநீர்வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிகளுக்கு கூட குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. மேலும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய சூழல் இருக்கிறது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அம்சநகர் மற்றும் ராமானூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ஒரு வேளை திருமண மண்டபம் கட்டப்பட்டால் ஒலிப்பெருக்கியினால் உண்டாகும் சத்தத்தில் குழந்தைகள் சரிவர படிக்க முடியாது. எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் மணல் அள்ள உரிய அனுமதிக்கப்படாததால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். பருவ மழையில்லாத காரணத்தால் விவசாயமும் பொய்த்து விட்டது. நாங்கள் அரசு தொகுப்பு வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு தான் மணல் கொடுத்து தொழில் செய்கிறோம். எனவே மணல் அள்ளுவதற்கு உரிய அனுமதி தர வேண்டும் என கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் குப்பாச்சிப்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கராசு அளித்த மனுவில், குளித்தலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் எனது நிலத்தை அடமானம் வைத்து டிராக்டர் கடன் பெற்றேன். இந்த நிலையில் கடனை செலுத்தாவிட்டால் மேற்படி நிலம் விற்பனைக்கு வந்துவிடும் என விளம்பரப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட மிரட்டல்களை விடுத்து அந்த வங்கி நிர்வாகத்தினர் என்னை அச்சுறுத்துகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடன் விவசாய சங்க பிரதிநிதிகளும் சேர்ந்து வந்து கலெக்டரிடம், நிலைமையை எடுத்து கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தின் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சரின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் உள்ளிட்டவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மனு அளித்த 4 பயனாளிகளுக்கு அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 1 பயனாளிக்கு சக்கர நாற்காலியும், 1 பயனாளிக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், 2 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, ஆதிதிராவிட நல அலுவலர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story