வெளிநாட்டில் கூலித்தொழிலாளி மர்மசாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்


வெளிநாட்டில் கூலித்தொழிலாளி மர்மசாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:00 AM IST (Updated: 5 Jun 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை பார்த்த கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளியின் மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் வள்ளலார் தெருவை சேர்ந்த தம்புசாமியின் மனைவி இளவரசி, தனது 3 குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு வழங்கினார். அதில், எனது கணவர் தம்புசாமி (வயது 37) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி மதியம் துபாயில் இருந்து ஒருவர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தம்புசாமி துபாயில் கடந்த மாதம் இறந்து விட்டதாக கூறினார். கணவர் இறந்து ஒரு மாதம் ஆகபோகிற நிலையில் அவரது உடலை இன்னும் துபாயில் இருந்து அனுப்பவில்லை. அவரின் மர்மசாவு குறித்தும்? அவரது உடலை துபாயில் இருந்து உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி உடனடியாக தம்புசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தம்புசாமி-இளவரசி தம்பதியினருக்கு தேவிகா(13) என்கிற மகளும், கிஷோர்(10), சிவசக்தி(2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மின் நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில், பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் உள்ள மின்நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்நகர் பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 184 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் 8 நபர்களுக்கு குடும்ப அட்டை நகல்களையும், நொச்சியம் மற்றும் கல்பாடி கிராமங்களை சேர்ந்த 4 நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story